உத்தரப் பிரதேசம் மாநிலம், நொய்டா பகுதியைச் சேர்ந்த 11வயது சிறுமி ஒருவர் காசனா பகுதியில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்குச் சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிறுமியின் அக்காவிற்கும், அவரது கணவருக்கும் சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மனைவிக்கு பாடம் புகட்டுவதாகக் கூறி, அங்கிருந்து வெளியில் சென்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த 11 வயது சிறுமியும் மாயமாகியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் சகோதரி காவல்நிலையத்தில் கணவருடன் சேர்ந்து, தனது தங்கையையும் காணவில்லை எனப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அதேபகுதியில் முட்புதிரில் சிறுமி ஒருவர் சுயநினைவில்லாமல் காயங்களுடன் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் தனது அக்காவின் கணவர், தன்னை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ய முயன்றதாக அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய சிறுமியின் சகோதரி, 'தனது கணவர் தன்னை பழிவாங்குவதாக நினைத்து, தங்கையை இந்த நிலைமைக்கு ஆளாக்கியுள்ளதாக' வேதனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.