இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் பிரஸ்சில் நடைபெறவிருக்கும் இருதரப்பு உச்சிமாநாட்டிற்கு செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நட்புக்கரம் நீட்டும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மார்ச் மாத அமர்வின்போது நடைபெறவிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்த முடிவு செய்த நிலையில் இம்முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பது இந்திய அரசின் ராசதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ஜனநாயக வழிமுறைகள் மூலமாக உரிய செயல்முறையைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் இந்த விஷயத்தில் இந்திய அரசின் நியாயமான எண்ணத்தை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் புரிந்துகொள்ளப்படும் என்று வெளிவிவகாரத் துறை அலுவலர்கள் நம்பிக்கையாகக் கூறுவதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
வரும் மார்ச் மாதத்தில் ஐரோப்ப ஒன்றியத்திற்கு பயணப்படவிருக்கும் பிரதமர் மோடியின் அரசத் திட்டங்களைத் தயார் செய்ய பிரஸ்சிலுக்கு முன்கூட்டியே சென்றிருக்கும் இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமிருந்து குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி நேரடி கருத்துகளைப் பெற்று பிறகு இது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க ஐரோப்பிய சட்ட வல்லுநர்கள் முடிவெடுத்து உள்ளனர் எனவும் அறிய முடிகிறது.
இதையும் படிங்க : சிஏஏ போராட்டம் - 250 பேருக்குத் தடுப்புக் காவல்!