நன்கொடை பத்திரம்
தேர்தல் நிதி வசூலில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், தேர்தல் நிதிக்கான நன்கொடை பத்திரத்தை (Electoral Bond) ஆளும் மத்திய பாஜகஅரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கு தனி நபரோ, ஒரு நிறுவனமோ நிதியளிக்க முடியும். இதில் நிதியளிப்பவர்களின் தகவலும் நிதியைப் பெறுபவர்களின் தகவலும் பதிவு செய்யப்படுவதில்லை. பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இவை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தல் நன்கொடை பத்திரத்திரத்திற்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for democratic reforms) உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அதில், தேர்தலில் நிதியளிப்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவே தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையம்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கடந்த 25ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதனை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு நேற்று வெளியிட்டிருந்து. அதில், தேர்தல் நன்கொடை பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லையெனவும் அவை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மே 2017-ல் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தையும் தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது.
பிரமாண பத்திரத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாவது:
- தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளிப்படைத்தன்மையில்லை, அவை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
- தேர்தல் நன்கொடை பத்திரங்கள், போலி நிறுவனங்கள் மூலம் கருப்புப் பணத்தை உள்ளே கொண்டு வர வாய்ப்புள்ளது.
- தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதி வருவதன் மூலமாக இந்தியத் தேர்தலில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த மனு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.