நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தும், தகுந்த இடைவேளியைப் பின்பற்றியும் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், நாட்டில் தொற்று பாதிப்பு குறையவில்லை. உலகளவில் கரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ஃபேஸ்புக் பதிவில், " இந்தக் இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். எந்தப் புயலாலும் கடைசி வரை தொடர முடியாது. பல நாடுகளில் ஊரடங்கை நீக்கிவிட்டு, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பொருளாதாரத்தை உயர்த்துவதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
தற்போது இந்திய மக்கள் ஆன்மிகம் மீதும், அறிவியல் மீதும் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். பயம் என்ற பொத்தானை மக்கள் கிளிக் செய்யாமல், தடுப்பு மற்றும் பாதுகாப்புக்கான பொத்தானையே கிளிக் செய்ய வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது போல், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள பாரம்பரிய உணவுகளையும் உண்ண வேண்டும்.
கரோனாவுக்கான செய்திகளை அனுப்பும் ஆர்வத்தில் நண்பர்களுக்கும்,குடும்பத்தினருக்கும் பொய்யான செய்திகளை எப்போதும் அனுப்பிவிடக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.