அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இடையே வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை.
இதனையடுத்து அமெரிக்கா-வட கொரியா இடையிலான இரண்டாம் கட்ட உச்சி மாநாடு தோல்வியை சந்தித்தது. உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தென் கொரியா மிகுந்த ஏமாற்றமடைந்தது.
இந்நிலையில், வட கொரியாவில் உள்ள சோஹெ ஏவுகணை ஏவுதளம் பயன்பாட்டுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் சர்வதேச ஆய்வுகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018இல் மூடப்பட்ட சோஹெ ஏவுகணை ஏவுதளம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாகவும், எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வட கொரியா பாதுகாப்புத் துறை அமைச்சர், தாங்கள் எவ்வித ஏவுகணை சோதனைக்கும் தயாராகவில்லை என கூறியுள்ளார்.
எனினும், வட கொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.