இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பது குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே பரவிவருகிறது. கோவிட்-19 தொற்று காரணமாக மற்ற நிறுவனங்களைப் போலவே இஸ்ரோவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஆக.20) காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய இஸ்ரோ தலைவர் கே. சிவன், "இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுவதாக பரவும் தகவல் உண்மையல்ல. இது ஒரு தவறான கருத்து, இஸ்ரோ தொடர்ந்து அரசின் கீழ் செயல்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இஸ்ரோவின் செயல்பாடுகள் அதன் வளங்களை சிறப்பாக பயன்படுத்தி விண்வெளி துறையில் பல சிறப்பான சாதனைகளைப் படைக்கும் வகையில் இருக்க வேண்டும்" என்றார்.
அதேபோல் இஸ்ரோவின் அறிவியல் செயலர் உமா மகேஷ்வரன், "இஸ்ரோவை தனியார்மயமாக்குவதற்கான எந்த திட்டமும் தற்போது இல்லை. விண்வெளி சீர்திருத்தங்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும்" என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், கரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 10 விண்வெளி திட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள், ரஷ்யாவில் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களது பயிற்சியும் சிறிது காலம் கரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கோர முடியாது என பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்!