மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் நீடித்துவருகிறது. தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க மறுத்த நிலையில், இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினால் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தரப்படும் என தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பிறகும் காங்கிரஸ் ஆதரவு தர மறுத்துவந்த நிலையில், ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்டு சிவசேனா ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தது.
ஆனால், கூடுதல் நேரம் தர மறுத்து மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையை ஈடிவி பாரத் செய்தியாளர் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டார். அப்போது, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக வெளியான தகவல் அதிகாரப்பூர்வமற்றது என ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உலகின் தலைசிறந்த செல்ஃபி: கேரள முதலமைச்சருக்கு குவியும் பாராட்டு!