உலகளவில் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸான கோவிட்-19 பரவுவதைத் தடுக்க, நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பாராட்டிய இந்தியப் பொது சுகாதாரத் துறை (Public Health Foundation of India-PHFI) தலைவர் பேராசிரியர் கே. ஸ்ரீநாத் ரெட்டி, லேசான மற்றும் கடுமையான அறிகுறிகளைக் காண்பிப்பவர்களை மட்டுமே பரிசோதிப்பது, இந்தியாவில் சரியான அணுகுமுறையாகும்.
நாட்டின் முழு மக்களையும், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமற்றது என்றும் கூறினார். கோவிட் (COVID)-19 பெருந்தொற்றுக்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மீது, ஆந்திர மாநில அரசின் பொது சுகாதார ஆலோசகராகவும் உள்ள ஸ்ரீநாத் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.
அவரது நேர்காணலின் சில பகுதிகளை இங்கு காணலாம்:
அமெரிக்காவும், சீனாவும் கடுமையான சுகாதார நெருக்கடியை சந்திக்கின்றன. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் நாம் என்ன செய்ய வேண்டும்? லாக்டவுனுக்குப் பிந்தைய எதிர்விளைவுகள் எப்படி இருக்கும்?
கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதிப்பு, இந்தியாவில் மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்டது. இந்த வைரஸின் தன்மை தெரியாததால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். நாடு தழுவிய லாக்டவுனை அறிவித்தது பாராட்டத்தக்க நடவடிக்கை.
இந்த நடவடிக்கை கோவிட்-19 பெருந்தொற்று நோயின் பரவலை வெற்றிகரமாகத் தடுத்து அதன் அளவைக் கட்டுப்படுத்தியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் சில சாதகமான முடிவுகளை அளித்துள்ளன.
130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் தற்போதைய சோதனை விகிதம் போதுமானதா?
130 கோடி மக்கள் தொகையையும் சோதிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. லேசான மற்றும் கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்களைச் சோதிப்பது சரியான அணுகுமுறை. எங்கள் எல்லா வளங்களையும், சோதனைக்கு மட்டும் பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.
வைரஸைக் கட்டுப்படுத்த என்ன வகையான ஆராய்ச்சி செய்யப்படுகிறது?
இந்தியாவின் பல நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்க முன்வந்துள்ளன. ஒரு தடுப்பூசி உருவாக்க அல்லது குணமடைய 18 மாதங்கள் ஆகலாம். இந்தியா எந்த வகையான மருந்துகளையும் தயாரிக்கும் திறன் கொண்டது. குறைந்த விலையில் ஹெபடைடிஸ் தடுப்பூசியை உருவாக்கி, அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வரலாறு எங்களிடம் உள்ளது.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸின்(nCoV) மரபணு இந்தியாவில் இருந்து வேறுபட்டதா?
கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயை போலவே வைரஸ்கள் இடையே மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு குறைவு. வேறுபாடுகளும் மிக மிக அரிதாக இருக்கும். ஆகவே மரபணுப் பொருட்களில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அப்படி நிகழவும் வாய்ப்பு மிக மிக குறைவு.
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் மெடெக் விசாகப்பட்டினத்தின் பங்கு என்ன? இது சுகாதார மற்றும் மருந்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்குமா?
விசாகப்பட்டினத்திலுள்ள மருந்தகத் தொழில்நுட்பம் (MedTech- மெடெக்) எதிர்காலத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கப்போகிறது. உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமல்ல, சர்வதேச ஏற்றுமதிக்கும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதைப் பார்க்கிறோம். மருத்துவ உபகரணங்களை குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இந்த சுகாதார நெருக்கடி, குறைந்த கட்டண உபகரணங்களை உருவாக்க சரியான நேரம்.
சீனாவின் சோதனை கருவிகள் வைரஸை பரப்பக்கூடும் என்று வதந்திகள் உலவுகிறதே?
சோதனை கருவிகள் மூலம் பரவும் வாய்ப்பு இல்லை. ஆனால் அவற்றின் தரம் கவலைக்கு ஒரு காரணம். அவற்றை இறக்குமதி செய்வதற்கு முன் தரமான சோதனைகளை நடத்த வேண்டும். இந்தக் கருவிகளைப் பற்றி மாநில அரசுகள் இறுதி அழைப்பை எடுக்கும்.
வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு பயணிக்க வேண்டும். லாக்டவுன் நடவடிக்கை முடிந்த பின்னரும், மக்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பயணிக்க வேண்டும். ஒரு தடுப்பூசி உருவாக்கப்படும் வரை, ஒருவருக்கொருவர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிக முக்கியமானது.
இவ்வாறான செயல்களால் வைரஸை நாம் கட்டுப்படுத்தலாம். எனினும் வைரஸ் உயிருடன் உள்ளது. ஆகவே ஓரிரு வருடங்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. வயதானவர்கள் மற்றும் பிற உயர் பாதிப்புக்குள்ளான குழுக்கள் தொற்றுநோய்க்கு அதிக ஆபத்து இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் புதிய கரோனா வைரஸான கோவிட்-19 ஐை சேர்க்கும் திட்டத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
கரோனா வைரஸின் புதிய பரிணாமமான கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் குறித்து இளைய தலைமுறையினருக்குக் கற்பிப்பது கட்டாயமாகத் தெரிகிறது. கோவிட்-19 பெருந்தொற்று நிகழ்ந்தப் பிறகு, எதிர்கால வைரஸ் வெடிப்பை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பது நல்லது.
இவ்வாறு ஈடிவி பாரத்தின் வினாக்களுக்கு, இந்தியப் பொது சுகாதாரத் துறை (Public Health Foundation of India-PHFI) தலைவர் பேராசிரியர் கே. ஸ்ரீநாத் ரெட்டி பதிலளித்தார்.