நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதியப்படும் வாக்குகளை சரிபார்ப்பதற்காக விவிபேட் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சட்டப்பேரவை தொதியில் ஐந்து வாக்குச்சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு விவிபேட் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், எந்த முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என சிவோட் தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் யஷ்வந்த் தெஷ்முக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "542 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 4000-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் 20 ஆயிரத்து 625 விவிபேட் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. இதில், எந்த முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.