கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக முடங்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தார். அப்போது, குறிப்பிட்ட சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்தும் தனியார்மயம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவை தனியார்மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "கோல் இந்தியா வரும் 2023-24ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியை எட்டும். தற்போது நாட்டில் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும்.
கோல் இந்தியாவுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 'ஆத்மனிர்பர் பாரத் அபியனின்' கீழ் ரூ.50 ஆயிரம் கோடியை மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது. எனவே, கோல் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கான எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. அதன் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலே அரசு செயல்பட்டுவருகிறது. நிலக்கரி உற்பத்தியை பொறுத்தவரை இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மே 31 வரை சென்னை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்!