இன்று (செப் 16) நடைபெற்ற மாநிலங்களவை கூட்டுத் தொடரில் பேசிய உத்தரப் பிரதேச எம்பி அனில் அகர்வால், கடந்த ஆறு மாதங்களில் சீனா மற்றம் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவுவது அதிகரித்துள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், கடந்த ஆறு மாதங்களாக இந்திய-சீன எல்லைப் பகுதியில் ஊடுருவல் நடைபெற்றதற்கான எவ்வித ஆதாரங்களும், தடயங்களும் இல்லை. பாகிஸ்தான் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 47 முறை இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்துள்ளது.
மத்திய அரசு இந்திய எல்லைப் பகுதியில் நடைபெறும் பதற்றங்களைப் போக்கவும், எல்லை தாண்டிய ஊடுருவலைக் கட்டுப்படுத்தவும் பண்முறை அனுகுமுறையை பின்பற்றிவருகிறது.
சர்வதேச எல்லை அல்லது கட்டுப்பாட்டுக் கோடு பகுதி, மேம்பட்ட உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, எல்லை வேலி அமைத்தல், தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை அரசு மேற்கொண்டுவருகிறது.
மேலும், ஊடுருவல்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நேற்று (செப் 15), இந்தியா-சீனா பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , கடந்த ஜூன் 15ஆம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் அத்துமீறிய தாக்குதலால்இந்தியப் படைகள் பெரும் உயிரிழப்புகளை சந்தித்தன.
எங்கள் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறை விதிகளின்படி, கடந்த மே மாத நடுப்பகுதியில், சீனா எல்லைப் பகுதியை மீறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது" என்று கூறினார்.
நேற்று ராஜ்நாத் சிங் அளித்த தகவலும், இன்று உள்துறை இணை அமைச்சரால் வழங்கப்பட்ட தகவலும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சக அலுவலர், பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிக்கையுடன் தங்கள் அறிக்கை முரண்படவில்லை. ஊடுருவல் என்பது அத்துமீறலுக்கு சமமானது அல்ல. ஊடுருவல் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பயங்கரவாதத்தைக் கடத்த முற்படுகிறது. எனவே, ஆதாரமின்றி ஊடுருவல் நடந்ததாகக் கூறுவது தவறு என்று கூறினார்.