இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இத்திருநாளில் பொதுவெளியில் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியிலும் பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடி வழிப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் யமுனை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு அதற்கும் தடைவிதிப்பதாக அம்மாநிலத்தின் காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தடையை மீறி செயல்படுவோர் மீது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் யமுனை ஆற்றில் சிலைகளை கரைக்க தடைவிதித்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு டெல்லி அரசு விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கை குளங்களை ஏற்பாடு செய்திருந்தது, ஆனால், நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு அந்த குளங்களில் கூட கரைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, வாளி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அதனினுள் தண்ணீர் வைத்து சிலைகளை கரைத்துக் கொள்ளும்படி அறிவுறத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா?