இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தால், சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் பெரிய அளவில் தவிர்க்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கவும் உறுதி செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில, இருசக்கர வாகனங்களில் வருவோர் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு பெட்ரோல் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா காவல் ஆணையர் அனுஜ் சர்மா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் அணிந்திருக்கவில்லை என்றாலும் பெட்ரொல் வழங்கப்படமாட்டாது என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கூட்டம் ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் 2,000 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறும் அரசு நான் இல்லை. உங்கள் அனைவரையும் மாஸ்க் அணியுமாறு நான் வேண்டுகோள்தான் விடுக்கிறேன்.
அதேபோல் ஹெல்மெட் அணிந்து பைக்குகளில் பயணியுங்கள். ஹெல்மெட் வாங்க முடியாதவர்களுக்கு அரசு ஹெல்மெட்டை வழங்கும். ஒருவர் தங்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்துகொண்டால் அவருக்கு ஹெல்மெட் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தால் அரசிற்கு வருவாய் இழப்பு