பருவமழை தொடர்ந்து பொய்த்துவருவதால் மக்கள் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். முதலில் நகரங்களில் மட்டுமே இருந்த ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பழக்கம் எப்போதோ கிராமங்கள் முழுவதும் பரவிவிட்டது. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
முக்கியமாக சென்னை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றதால் நீர்த் தேவையை அருகிலிருக்கும் ஊர்களிலிருந்தே பூர்த்தி செய்கின்றனர். இந்நிலையில் நிதி ஆயோக் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளவில்லை என்றால் 2020-க்குள் சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றி வறண்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2030இல் சுமார் 40 விழுக்காடு இந்திய மக்களுக்கு சரியான குடிநீர் கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற மெட்ரோ நகரங்களைவிட சென்னை அதிக மழையைப் பெற்றாலும் சரியான திட்டமிடல் இல்லாததால், அங்குள்ள மூன்று நதிகள், நான்கு ஏரிகள், ஆறு வனப்பகுதிகள் முற்றிலுமாக வறண்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.