அண்மையில் வந்த செய்தி ஒன்று உத்தரப் பிரதேச மாநில மக்களை மட்டுமல்லாமல், இந்திய மக்கள் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தது. அம்மாநிலத்தில் சோன்பாத்ரா மாவட்டத்தில், சுமார் 3,000 டன் தங்கம் உள்ள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதே அது. இந்தத் தங்கத்தை வெட்டி எடுத்தால், தற்போது இருக்கும் நிலையை விட இந்தியாவில் தங்கத்தின் இருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என்ற ஆச்சரிய தகவலையும் சிலர் வெளியிட்டனர். இந்தத் தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அம்மாவட்டத்தின் சுரங்க அதிகாரி, கே.கே. ராய், தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சுரங்கத்தை ஏலம் விடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இந்தத் தகவல் வதந்தி என இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அம்மையத்தின் தலைமை இயக்குநர் ஸ்ரீதர் , ’சோன்பாத்ராவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய தகவல், ஜிஎஸ்ஐ தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை. அங்கு தங்கம் இருப்பதாக ஜிஎஸ்ஐ மதிப்பிடவில்லை. அவ்வாறு கண்டுபிடித்தால் மாநில அரசிடம் தெரிவிப்போம். நாங்கள் 1998-99, 1999-2000 ஆகிய ஆண்டுகளில் இந்த இடத்தில் ஆய்வு செய்தோம். அதற்கான அறிக்கையை மாநில அரசிடம் கொடுத்துள்ளோம். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், சோன்பாத்ரா மாவட்டத்தில் தங்கம் போன்ற வளங்கள் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!