இந்தியாவில் கோவிட்-19 பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கடந்த 24 மணி நேரமாக 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிதாக யாருக்கும் கோவிட்-19 தொற்று கண்டறியப்படவில்லை. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதமும் 30% மேல் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை மட்டும் 86,000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு 95 ஆயிரம் மாதிரிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம். இதற்காகவே 472 கரோனா தொற்று கண்டறியும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை வரை 16,02,777 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வேகமாக வெற்றியை நோக்கி முன்னேறிவருகிறோம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவ மத்திய அரசின் குழுக்கள் டெல்லி உள்பட 10 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டில் கரோனா இரட்டிப்பாகும் விகிதம் என்பது முன்பு 3.2 நாள்களாக இருந்தது. அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக கரோனா பரவல் இரட்டிப்பாகும் விகிதம் தற்போது 12 நாள்களாக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் 3.3ஆக உள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 30.7 விழுக்காடாக உள்ளது. இது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரத்தைக் காட்டுகிறது.
நாட்டிலுள்ள 10 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரமாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. நாடு முழுவதும் மொத்தம் 855 சிறப்பு கோவிட்-19 மருத்துவமனைகளும் 1,65,723 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. 1,984 அர்ப்பணிக்கப்பட்ட கோவிட்-19 சுகாதார மையங்கள் நாட்டில் உள்ளன. குறிப்பாக டெல்லியில் மட்டும் 5000 படுக்கைகளுடன் 17 மையங்கள் உள்ளன.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 2.48 விழுக்காட்டினர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 1.94 விழுக்காட்டினருக்கு மட்டுமே செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. 0.40 விழுக்காட்டினர் மட்டுமே வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர்" என்றார்.
இந்தியாவில் இதுவரை 62,939 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,109 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்துகள் எப்படிச் செயலாற்றுகின்றன?