கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது மரணம் தொடர்பாக பீகாரில் உள்ள சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு அம்மாநில அரசு மாற்றியது.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றிய பீகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே விருப்ப ஓய்வு பெற முடிவெடுத்தார். அவரது இந்த திடீர் முடிவை ஏற்ற பீகார் அரசு, அதற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. பாண்டே தனது டிஜிபி பதவியில் இருந்து விலகியதற்கு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கு விசாரணையே காரணம் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்துப் பேசிய குப்தேஷ்வர் பாண்டே, "சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் எனது வி.ஆர்.எஸ்ஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது மகனின் மரணத்திற்காக நீதி கேட்ட ஆதரவற்ற ஒரு தந்தைக்கு, இன்னொரு தந்தையாக நான் உதவியுள்ளேன். பீகார் காவல்துறையின் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில், வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு எடுத்தது.
எங்கள் காவல்துறை அலுவலர்கள் மும்பை காவல் துறையினரால் மிக மோசமாக நடத்தப்பட்டதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்தேன். பீகாரின் பெருமைக்காக நான் போராடினேன்.
சுஷாந்துக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன்" எனக் கூறினார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கில் போதைப்பொருள் சம்பந்தப்பட்டுள்ளதால், வழக்கை விசாரிக்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், அப்துல் பாசித் பரிஹார், ஜைத் விலாட்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.