மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு இடைக்கால பிணை வழங்க சிபிஐ வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவருக்கு உடல்நலப் பிரச்னைகள் எதுவும் இல்லை என்றும், பாதுகாப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் கரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து அவர் தப்ப வாய்ப்புள்ளது என்றும் சிபிஐ பதிலளித்துள்ளது.
சொந்த மகளை கொன்ற குற்றத்திற்காக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் பைகுல்லா சிறையில் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ளார். அந்த சிறைச்சாலையில் கரோனா தொற்று பரவியதையடுத்து, தனக்கு பிணை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “இந்திராணியின் உடல்நலத்தில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. அவருக்கு பிணை வழங்கப்பட்டால்தான், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. சிறையில் அனைத்து கைதிகளையும் சிறை அலுவலர்கள் முறையாக கவனித்து வருவதால் அவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போதைய சூழலில் இந்திராணி பிணையில் விடுவிக்கப்பட்டால், இன்னும் விசாரிக்கப்படாத சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தி கலைக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர் ஒரு வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் இடைக்கால பிணை பெற தகுதியற்றவர். அவருக்கு பிணை வழங்கப்பட்டால், தப்பிச் செல்வதற்கு வாய்ப்பாக அமையும்” என்று சிபிஐ தரப்பு வாதிட்டது.
முன்னதாக, இந்திராணி முகார்ஜியின் மகள் ஷீனா போரா (24) 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திராணி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.