அயோத்தி வழக்கின் 40நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை ஏற்று சன்னி வக்பு வாரியம் வழக்கைத் திரும்பப் பெறவுள்ளதாக தகவல் வெளியானது. அயோத்தி வழக்கைத் தொடர்ந்த மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு அதிர்ச்சியாகினர்.
இது குறித்து நாட்டின் மிக முக்கிய இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான ஜாமியத் உலமா - இ- ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மதானி, "எந்த ஒரு சமரசத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அயோத்தி வழக்கின் தீர்ப்பு மதநம்பிக்கை சார்ந்து இல்லாமல் ஆதாரங்களின் அடிப்படையில் வெளியாகும்என எதிர்பார்க்கிறேன்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள மக்கள் அனைவரும் புனிதமானவர்கள்தான். தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அரசியலமைப்பின் பாரம்பரியங்களுக்கு முடிவு கட்டிவிட்டு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் சிலர் உள்ளனர். சன்னி வக்பு வாரியத்தின் தலைவர் ஒன்றும் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையாளர் அல்ல. அவர் அந்த நிலத்தின் பொறுப்பாளர் மட்டுமே. நீதிமன்றத்தின் முடிவை ஏற்போம்" என்றார்.
இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றதில் சன்னி வக்பு வாரியம் மிக முக்கியப் பங்கை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமலேஷ் திவாரியை கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!