கடந்த 40 நாள்களாக, புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய அரசு ஏழாம்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பல மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான திட்டத்தை அரசு முன்வைத்ததாகவும் ஆனால், சட்டத்தை நீக்குவது தொடர்பாகப் பேச வேண்டும் என்பதில் விவசாயிகள் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று பேரணி நடத்தவுள்ளதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "நாடாளுமன்றத்தின் மூலமாகவே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் ஆலோசனைகளை திருத்தமாக மேற்கொள்ள தயாராக உள்ளோம்" என்றார்.
முன்னதாக, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடங்கியது. மத்திய அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் தோமர், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.