டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் பல்வேறு வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர். அங்கிருந்து இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றுக்கும் ஆளானார்கள். இதையடுத்து இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சிலர் விசா காலம் முடிந்தும், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து காவலர்கள் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை8), 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 91 பேருக்கு நீதிமன்றம் பிணை (ஜாமின்) வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் 122 மலேசிய பிரஜைகளுக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை7) பிணை வழங்கியது. குற்றப்பத்திரிகைகளின்படி, அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் தொற்று நோய்கள் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள், அரசாங்க வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.