பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் கரோனா பரவலுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
243 இடங்களை கொண்ட பிகார் சட்டப்பேரவையில் 125 இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களையே பெற முடிந்தது. அதேபோல ஒவைசியின் மஜ்லிஸ் கட்சியும் ஐந்து இடங்களை பெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதா தளத்தைவிட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், பாஜகவில் இருந்து ஒருவர் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் உலாவர தொடங்கியது.
இருப்பினும், இதை முற்றிலுமாக மறுத்த பாஜக நிதிஷ்குமார் பிகார் முதலமைச்சராக தொடர்ந்து இருப்பார் என்று திட்டவட்டமாக அறிவித்தது. மேலும், துணை முதலமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார் இன்று ஏழாவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றார். அதேபோல பிகாரின் துணை முதலமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.