பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ், மாநிலத்தின் உண்மையான பிரச்சினைகள் குறித்து நிதிஷ்குமார் பேசுவது இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "கல்வி, நீர்ப்பாசனம், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நிதிஷ்குமார் வாய் திறப்பதில்லை.
நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் மேம்படுத்த நாம் அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், மாநிலத்தின் முதலமைச்சர் கடந்த காலத்தை குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, தொழிற்சாலைகள் பிரச்னைகள் குறித்து ஏன் அவர் பேசுவதில்லை.
பிகாருக்கு சிறப்புத் தகுதி வழங்கப்படாமல் இருப்பது ஏன் என பாஜக தலைவர் நட்டாவை கேட்க விரும்புகிறேன். இது குறித்து விவாதிக்க நான் தயாராக உள்ளேன்" என்றார்.