நடப்பு நிதியாண்டுக்கான (2020-21) மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்து அறிவிப்பு வெளியிட்டுவருகிறார். பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, புதிய செயல்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செயல்திட்டங்கள் ஆகியவை குறித்தும் அறிவித்தார். மொத்தமாக சுற்றுலாத் துறைக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள தொல்லியல் சிறம்பம்சம் கொண்ட ஆதிச்சநல்லூரில் புதிய தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். இதேபோல, ஹரியானாவின் ராக்கி கார்க்கி, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர், மகாராஷ்டிராவின் திவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களிலும் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் இதனை அறிவிக்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் கீழடி குறித்து அறிவிப்பு வெளியாகாததால் அதிருப்தியடைந்து எதிர்க்குரல் எழுப்பினர்.
உலகின் மூத்தக்குடி ஆதிச்சநல்லூர்?
தமிழ்நாட்டின் மிகப் பழமையான நாகரிகங்களை உணர்த்தும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஆதிச்சநல்லூர் விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் என்ற இடத்தில் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் அமைந்துள்ளது. இங்கு கி.மு. 1600ஆம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆதிச்சநல்லூர் ஓர் இரும்புக்கால, பெருங்கற்கால தொல்லியல் இடமாகும். இரும்புக்கால மக்கள் இறந்தவர்களின் உடல்களைத் தாழிகளில் வைத்துப் புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதேபோன்ற ஆயிரக்கணக்கான தாழிகள் ஆதிச்சநல்லூரில் காணப்படுகின்றன. இந்த இடம் சுமார் 116 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகிறது.
2004ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி இரும்புக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான பல தொல்லியல் சான்றுகளைக் கண்டுபிடித்தது. முன்னதாக, 1867இல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்பவர் தொல்லியல் பொருள்களைக் கண்டுபிடித்திருந்தார். பல மனித எலும்புக்கூடுகளும் முதுமக்கள் தாழிகளும் அங்கு இருந்ததால், ஆதிச்சநல்லூர் இடுகாடுகளாக இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
வெப்ப உமிழ் காலக்கணிப்பு (Thermoluniscence dating) வழியாக இந்த இடம் 3000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு ஆய்வுகள் எதும் நடத்தப்படாததால், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அமைப்பினரும் அருங்காட்சியகம் அமைக்க பல வருடங்களாகக் கோரிக்கைவைத்துவந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ’இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த அறிவிப்புகள் உள்ளன’ - எம்.எஸ். சுவாமிநாதான்