கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா நேற்று அறிவித்தார். மேலும் அந்த இளைஞர், அவர் நண்பர்கள் இரண்டு பேர், இளைஞருக்கு சிகிச்சை அளித்த இரண்டு செவிலியர் ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டபோது 311 பேருடன் ஒன்றாக இருந்துள்ளார். எனவே அவர்களுக்கு மாணவரிடம் இருந்து நிபா வைரஸ் பரவியிருக்கும் என்ற அச்சத்தில் தற்போது அவர்கள் அனைவரும் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலையில் மெதுவான முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிவதற்காக மத்திய சுகாதரத் துறை சார்பில் மருத்துவக்குழுவினர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். மேலும் வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் பரவுவதை தடுக்க பல மருத்துமனைகளில் மருத்துவ குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.