புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவலை அடுத்து கடந்த ஆறு மாத காலங்களாக பள்ளி, கல்லூரி, சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூடப்பட்டுள்ள இடங்களில் மது அருந்துதல், சீட்டு ஆடுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபடுவதாக காரைக்கால் காவல் துறைக்கு தொடர் புகார் வந்தது.
இதனையடுத்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் உத்தரவின்பேரில் காரைக்கால் மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து மேற்கொண்டது.
அதில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு நாள்களில் 12 பேர் கைது செய்யப்பட்டு 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் எச்சரித்துள்ளார்.