ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கிடைப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுவருகிறது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் மனித உரிமை கூட்டமைப்பு, பிரிவினைவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்த அமைப்பின் தலைவர் குர்ரம் பர்வேஸ், அமைப்பின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுவாதி சேஷாத்ரி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை இன்று (அக். 30) சோதனை நடத்தியது.
பெங்களூருவில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்குத் துபாயிலிருந்து நிதி கிடைக்க சுவாதி உதவியது குறித்த ஆதாரங்களைத் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சேகரித்துள்ளனர். மேலும், காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு சுவாதி நிதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த தேசிய புலனாய்வு முகாமை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது. மும்பையில் வசிக்கும் சுவாதி எம்.காம் பேக்கிங் பைனான்ஸ், எம்.ஏ. சமூகவியல் ஆகிய இரண்டு முதுகலைப் பட்டங்களை முடித்துவிட்டு 1999ஆம் ஆண்டு மும்பையில் ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றினார்.
பின்னர் பயிற்சி தெரப்பிஸ்ட், அறக்கட்டளையின் திட்ட அலுவலர், ஆராய்ச்சி விரிவுரையாளர், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் எனப் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.
தற்போது சுவாதி சேஷாத்ரி ஜம்மு கஷ்மீர் மனித உரிமை கூட்டமைப்பின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், பெங்களூருவில் உள்ள ஈக்குவேசன் நிறுவனத்தின் பகுதி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.