அருணாச்சல பிரதேசம் மாநிலம் மேற்கு கோன்சா தொகுதி தேசியவாத மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் டிரோங் அபோ, தனது உறவினர்கள் 10 பேருடன் கடந்த மே 10ஆம் தேதி காரில் சென்றார். அப்போது பயங்கரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் டிரோங் அபோ உட்பட அனைவரும் பலியாகினர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை (NIA) தற்போது நாகலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலை (NSCN) சேர்ந்த 4 முக்கியத் தலைவர்களை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, ‘மேற்கு கோன்சா தொகுதி தேசியவாத மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் டிரோங் அபோவின் படுகொலையில் தேசிய சோஷலிச கவுன்சிலை சேர்ந்த 4 முக்கியத் தலைவர்களின் பெயர்கள் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களைப் பிடிப்பதற்காக அஸ்ஸாம் - அருணாச்சல பிரதேச எல்லையில் அலுவலர்கள் முகாமிட்டுள்ளனர்’ என்றனர்.