டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையில் (என்ஐஏ) கடந்த மே மாதம் குர்கான் பகுதியில், கள்ள நோட்டு வழக்கில் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை என்ஐஏ அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் என்ஐஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த காவலர் ஒருவர், அங்கு சமையல் அறையில் வேலை பார்த்த வந்த உதவியாளர் ஒருவர் உதவியோடு அலுவலகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த கள்ள நோட்டுகளை கூட்டாக சேர்ந்து திருடியுள்ளனர்.
பொதுவாக என்ஐஏ அலுவலகத்தில் உள்ள 'இரும்பு அறை' என்று கூறப்படும் அறையில்தான் முக்கிய ஆவணங்கள், பணம் சம்பந்தமான பொருட்கள் வைக்கப்படும். இதனால் அவர்கள் இருவரும், அந்த இரும்பு அறையின் குளிர்சாதனப் பெட்டியின் நுழைவு வாயில் வழியாக புகுந்து கள்ளநோட்டுகளைத் திருடியுள்ளனர்.
திருட்டு சம்பவம் குறித்து என்ஐஏ அலுவலர்கள், அந்த அறையின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில் காவலரும், சமையலறை உதவியாளரும் கையும் களவுமாக சிக்கினர். இது தொடர்பாக டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு,திருட்டில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அந்த இருவரிடம் நடத்தப்பட்ட விசாராணையில், அறையில் இருக்கும் பணத்தைதான் திருட முயன்றதாகவும், ஆனால் அது கள்ள நோட்டு என்று தெரியாமல்தான் திருடியுள்ளதாவும் தெரிவித்துள்ளனர். மேலும் திருடப்பட்ட கள்ளநோட்டின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.