சவூதி அரேபியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தவர், மருத்துவர் சபீல் அகமது. இவர், 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஏரோநாட்டிகல் இன்ஜினியர் கபீல் அகமதுவின் தம்பி ஆவார். கபீல் அகமது, ஒரு குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.
அந்நேரத்தில் லண்டனில் 2010ஆம் ஆண்டு குடிபெயர்ந்து, கிங் ஃபஹத் மருத்துவமனையில் பணிபுரிந்த சபீல் அகமது(38), சவூதி அரேபியாவிலிருந்து புதுடெல்லிக்கு வந்தபோது தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவுக்கு இந்தியாவில் ஆட்களைச் சேர்ப்பதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் சபீல் அகமது, சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக பெங்களூருவில் 2012ஆம் ஆண்டில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அகமத்தும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்.
இந்த வழக்கை ஆரம்பத்தில் பெங்களூரு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த வழக்கில் கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினராக இருந்த எழுத்தாளர் பிரதாப் சிம்ஹாவைத் தாக்கும் சதித் தீட்டியதாக காவல் துறையினர் வழக்குப்பதிந்து இருந்தனர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் தண்டனை அனுபவித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் உள்ள இந்தியரை நாடு கடத்தியது தொடர்பாக, பதியப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அகமத்தின் அடையாளத்தை உறுதிபடுத்தியது. முன்னதாக, இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்த ஆரம்ப குற்றப்பத்திரிகையில் அவர் 'மருத்துவர்' என்று அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவர் சபீல் அகமதுவை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு ஆட்சேர்ப்பு சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.