தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கடந்த 6ஆம் தேதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி குண்டுகளின் மூலம் நீதி வழங்கப்பட்டதற்காக மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதேநேரத்தில், நீதி வழங்கப்பட்ட வழிமுறை சரியானது அல்ல என்ற வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இந்நிலையில், இவ்விஷயத்தில் தேசிய மனித உரிமை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் எத்தகைய வழிகாட்டல்களை வழங்கி இருக்கின்றன என்பதை தற்போது பார்ப்போம்.
என்.எச்.ஆர்.சி-யின் வழிகாட்டல்:
கடந்த 1997ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த போலி என்கவுன்டர்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, என்.எச்.ஆர்.சி-யின் அப்போதைய தலைவர் நீதிபதி வெங்கடாச்சலியா, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், என்கவுன்டரின்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அவர் வலியுறுத்தியிருந்தார்.
பின்னர் பல்வேறு வழிகாட்டல்களை முறைப்படுத்தி பட்டியல் இட்ட என்.எச்.ஆர்.சி, அந்த வழிகாட்டல்களுக்கு மத்திய – மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அந்த வழிகாட்டல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
என்கவுன்டர் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதும் காவல்துறை அதிகாரிகள் அதனை சரியான பதிவேட்டில் பதிவிட வேண்டும்.
என்கவுன்டர் நிகழ்ந்த சூழ்நிலை குறித்தும் அதனை நிகழ்த்திய காவல்துறையினர் குறித்தும் சுதந்திரமான பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.
என்கவுன்டர் நடந்த காவல் எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியே என்கவுன்டரை நடத்தி இருந்தால், அது குறித்த விசாரணையை சிஐடி போன்ற சுதாந்திரமான ஒரு விசாரணை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் குற்றம் இழைத்ததாக புகார் எழுமானால், அவர்கள் மீது பொருத்தமான ஐபிசி சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
காவல்துறை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு ஏற்படுமானால் அது குறித்து 3 மாதத்திற்குள் மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
காவல்துறை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அதுகுறித்து 48 மணி நேரத்திற்குள் என்.எச்.ஆர்.சி.க்கு தெரியப்படுத்த வேண்டும்.
பிரேத பரிசோதனை அறிக்கை, விசாரணை அறிக்கை, மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகிய தகவல்களைக் கொண்ட இரண்டாவது அறிக்கை 3 மாதங்களுக்குள் அனுப்பப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்:
நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்ட முறையில் காவல்துறையினரால் மரணங்கள் ஏற்படுமானால் அவ்விஷயத்தில் எத்தகைய வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 23 தேதி தெளிவாக விளக்கி இருக்கிறது. அந்த வழிகாட்டல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
கடுமையான குற்றங்கள் குறித்த தகவல்களை பெறும்போதெல்லாம் காவல்துறையினர் அதனை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். ( வழக்கு ஆவணமாகவோ அல்லது கணினியிலோ பதிவு செய்ய வேண்டும் )
என்கவுன்டர் மூலம் மரணம் ஏற்பட்டால், அது குறித்த முதல் தகவல் அறிக்கை உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, வழக்கு ஆவண பதிவு, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட தகவல்கள் நீதிமன்றத்துக்கு கூடிய விரைவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
என்கவுன்டரின் விவரங்களை தேசிய அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
சுதந்திரமான மற்றும் சார்பற்ற விசாரணை நடைபெறவில்லை என்ற சந்தேகம் இல்லாதபோது என்.எச்.ஆர்.சி விசாரணை தேவையில்லை.
என்கவுன்டர் மரணங்கள் நிகழ்ந்தால் அந்த வழக்குகள் தொடர்பான 6 மாதாந்திர அறிக்கைகள் என்.எச்.ஆர்.சிக்கு அனுப்பப்பட வேண்டும்.
என்கவுன்டர் மரணங்கள் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை அறிக்கை நீதித்துறை நடுவருக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காவல் எல்லைக்குள் நடக்கும் என்கவுன்டர் குறித்து வேறு ஒரு காவல்நிலையம்தான் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பிரேத பரிசோதனை வீடியோவாக எடுக்கப்பட்டு அவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
காவல்துறை தரப்பில் குற்றம் இழைக்கப்பட்டிருந்தால் குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் தாமதம் இருக்கக்கூடாது.
சம்பவம் நடந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வெகுமதியோ பதவி உயர்வோ வழங்கப்படக்கூடாது. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே இவை வழங்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: திஷா என்கவுன்டர் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை.!