கரோனா தடுப்பூசி விநியோகம்: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் - பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை இந்தியத் தலைமை மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஜனவரி 3ஆம் தேதி வழங்கியது.
வேளாண் திருத்தச் சட்டங்களை நீக்கக் கோரும் மனு மீதான விசாரணை!
1954ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொண்ட மத்திய அரசு, வேளாண் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை இன்று மேற்கொள்ளவுள்ளது.
புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை நீக்கக்கோரி தாக்கல்செய்த அனைத்து மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; இலங்கைத் தூதரகத்தில் முற்றுகைப் போராட்டம்!
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால், மாவீரர் நாள் நினைவுத் தூண்களை சிங்கள பேரினவாதம் இடித்துத் தள்ளியது. இப்போக்கை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக மதிமுக அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
சிட்னி டெஸ்ட்: பரபரப்பான ஐந்தாவது நாள் ஆட்டம்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் கடைசிநாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை இழப்பிற்கு 312 ரன்களை எடுத்ததன் மூலம் இந்திய அணிக்கு இலக்காக 407 ரன்களையும் நிர்ணயித்தது.
OnePlus Band இந்தியாவில் அறிமுகம்
ஒன்பிளஸ் நிறுவனம் ஜனவரி 11ஆம் தேதியான இன்று, தனது புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் ஆன்லைன் வழியாகக் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய ஸ்மார்ட் பேண்ட் குறித்த முக்கிய தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடாமல் உள்ளது. ஆனால், அமேசான் தளத்தில் இந்தப் புதிய சாதனத்திற்காக ஒரு பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில முக்கியக் குறிப்புகளை அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதில் குறிப்பாக இந்த ஒன்பிளஸ் பேண்ட் 14 நாள்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளுடன் வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.