ஒரு குழந்தைப் பிறக்கும்போது குடும்பத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், அதனுடன் பல பொறுப்புகளும் சேர்ந்துவருகின்றன. குழந்தைகள் எதையும் சொல்ல முடியாததால், அவர்களைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
நாட்டின் தேசிய சுகாதார இணையதளம் (என்எச்பி) இது குறித்து கூறுகையில், “குழந்தை பிறந்த முதல் 28 நாள்கள், அவர்களின் முக்கிய உயிர் வாழ்வதற்கான காலம் ஆகும். குழந்தைப் பருவத்தின் மற்ற பருவக் காலத்தைவிட இக்காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும். குழந்தை பிறந்த முதல் மாதம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு அடித்தளமாகும். ஆரோக்கியமான குழந்தைகள் தங்கள் சமூகங்களில் நன்கு வளர்கிறார்கள்” என்கிறது.
புள்ளி விவரங்கள்
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, உலகளவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு 1990இல் ஐந்த மில்லியனிலிருந்து 2019இல் 2.4 மில்லியனாகக் குறைந்துவிட்டாலும், குழந்தைகள் முதல் 28 நாள்களில் இறப்புக்கான மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
உலகளவில் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகளில், பிறக்கும் குழந்தைகள் இறப்புகள் மட்டும் 45% ஆகும். இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் 2.7 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கூடுதலாக, கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் அல்லது பிரசவத்தின்போது 2.6 மில்லியன் (26 லட்சம்) குழந்தைகள் உயிரிழக்கின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சத்து மூன்றாயிரம் தாய்மார்களும் உயிரிழக்கின்றனர்.
2016ஆம் ஆண்டில் 2.6 மில்லியன் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்தில் சரியான கவனிப்பு இல்லாத நிலைமைகள், நோய்களால் உயிரிழந்துள்ளன.
பிறந்த குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்கள்:
பிறந்த குழந்தைகளின் இறப்புகளில் பெரும்பாலானவை பிறந்த முதல் 28 நாள்களில் நிகழ்கின்றன. அத்தகைய நிகழ்வின் முக்கியக் காரணங்கள் பின்வருமாறு:
- முன்கூட்டியே குழந்தைப் பேறு அல்லது குறைப்பிரசவம்
- பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள்
- நோய்த்தொற்றுடன் பிறக்கும் குழந்தைகள்
- குழந்தை பிறக்கும்போது தாய்க்கு நிகழும் சிக்கல்கள்
குழந்தைகள் பிறந்த முதல் ஐந்து ஆண்டுகளில், நிமோனியா, வயிற்றுப்போக்கு, பிறப்பு குறைபாடுகள், மலேரியா ஆகியவை மரணத்திற்கு முக்கியக் காரணங்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு என்பது குழந்தைகளின் கடுமையான நோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய காரணியாகும்.
பிறந்த குழந்தையைப் பராமரிப்பது எப்படி?
பிறந்த குழந்தைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பது குறித்த உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:
- வெப்ப பாதுகாப்பு (எ.கா. தாயின் அரவணைப்பில் குழந்தை இருத்தல் - கதகதப்பாக)
- சுகாதாரமான தொப்புள் கொடி மற்றும் தோல் பராமரிப்பு
- ஆரம்ப மற்றும் பிரத்யேக தாய்ப்பால் (சீம்பால்)
- மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை (எ.கா. குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, நோய்வாய்ப்பட்ட அல்லது எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட தாய்)
- தடுப்பு சிகிச்சை (எ.கா. நோய்த்தடுப்பு பிசிஜி (BCG), ஹெபடைடிஸ் பி, வைட்டமின் கே, ஓக்குலர் ப்ரோபிலாக்ஸிஸ்)
குடும்பங்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டியவை:
- தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். (ஆபத்து அறிகுறிகளில் உணவுப் பிரச்சினைகளும் அடங்கும் அல்லது பிறந்த குழந்தைகளின் செயல்பாடு, சுவாசம் விடுவதில் சிரமம், காய்ச்சல், குழந்தைகளுக்கு ஏற்படும் வலி அல்லது குளிர்)
- பிறப்பைப் பதிவுசெய்ய வேண்டும்
- தேசிய அட்டவணைகளின்படி சரியான நேரத்தில் தடுப்பூசிக்கு குழந்தையை கொண்டுசெல்ல வேண்டும்.
கோவிட் -19 மற்றும் பிறந்த குழந்தையின் பராமரிப்பு:
கர்ப்பம், பிரசவம் அல்லது தாய்ப்பால் கொடுக்கும்போது கரோனா வைரஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுமா என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும், நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) கூறியது குறித்து பின்வருமாறு உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருப்பதாவது:
- தாய்க்கு கரோனா வைரஸ் நேர்மறை (பாசிட்டிவ்) இருப்பது உறுதியானால், பிறந்த குழந்தையுடன் ஒரே அறையில் தங்குவதன் அவசியம், தேவை, அபாயம் குறித்து சுகாதார அலுவலர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
- உங்களுக்கு பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கு அல்லது கவனித்துக்கொள்வதற்கு முன் குறைந்தது 20 விநாடிகளுக்கு ஒருமுறை உங்கள் கைகளை சோப்பு, தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையென்றால் குறைந்தது 60% ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்தவும்.
- குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும்போது முகமூடியை அணிந்துகொள்ளுங்கள்.
- கரோனா பாசிட்டிவ் உள்ள தாயிடமிருந்து குழந்தை குறைந்தது ஆறு அடி தூரம் இருக்க வேண்டும்.
- மருத்துவமனையில் இருக்கும்போது இடைவெளி தடுப்பைப் பயன்படுத்துவது பற்றி உங்கள் உடல்நலப் பராமரிப்பு அலுவலர்களுடன் ஆலோசிக்க வேண்டும் (எடுத்துக்காட்டாக, பிறந்த குழந்தையை இன்குபேட்டரில் வைப்பது).
- உங்கள் குழந்தைக்கு முகமூடியை அணிய வேண்டாம். இதனால் குழந்தைக்கு திடீரென இறப்பு நோய்க்குறி (SIDS) அல்லது தற்செயலான மூச்சுத் திணறல் மற்றும் கழுத்தை நெரிக்கும் அபாயமும் அதிகரிக்கலாம்.
- உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான தூக்கத்தை உறுதிசெய்ய வேண்டும். குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பாதுகாப்பான தூக்கம் ஒரு முக்கியப் பகுதியாகும்.
இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பாக வைப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.