டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள துணிகள் அண்மையில் திருடு போயின. இவ்விவகாரத்தில் மூன்று நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து, 28 ஆயிரம் மீட்டர் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கூறிய நொய்டா காவல் துறையினர், 'நொய்டாவில் செயல்பட்டுவரும் பின்னலாடை நிறுவனத்திலிருந்து, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள துணிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக எங்களுக்குப் புகார் கிடைத்தது.
புகாரின் அடிப்படையில், சோதனை நடத்தியதில் பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே வசித்துவரும் ஃபாதின் உத்தின் மாலிக், சாகீர் சாகித், சந்தோஷ் புத்ரா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தோம்.
மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில், பின்னலாடை நிறுவனத்தின் காவலர் தேநீர் அருந்த வரும்போது, அவர்களிடம் இயல்பாகப் பேசி நிறுவனத்தின் தகவல்களை சேகரித்துள்ளனர். பின் யாருமற்ற தருணத்தில் காவலருக்கு தேநீரிலோ அல்லது மதுபானத்திலோ மயக்க மருந்து கலந்து கொடுத்து திருடிச் செல்வதை மூவரும் வழக்கமாக கொண்டிருந்து இருக்கின்றனர்.
காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆடைகளைத் திருடிச் சென்றதாக மூவரும் ஒப்புக்கொண்டனர்' எனத் தெரிவித்தனர்.
இவர்களுடன் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரைத் தேடிவருவதாகவும், அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் கூறினர்.