கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கப்பட்டது, சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. இதனால் இந்தியாவிலிருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான நேபாள தொழிலாளர்கள், தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்ததையடுத்து உத்தரப் பிரதேசத்திலுள்ள மகாராஜ்நகர் வழியே நேபாளத்திற்குச் செல்ல முயன்றனர். இருப்பினும் கரோனா அச்சம் காரணமாக அவர்களுக்கு நேபாள அரசு அனுமதி தரவில்லை.
இருப்பினும், தங்களை நேபாளத்திற்குள் அனுமதிக்கும்படி சர்வதேச எல்லையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற இந்திய அலுவலர்கள் நேபாள தொழிலாளர்களை மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தியாவில் நான்காவது முறையாக ஊரடங்கு மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்தியா-நேபாள எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இதுவரை 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ் வர்தன்!