சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சபரிமலை மண்டல பூஜை தொடங்கிய காலகட்டதில் பெண் பக்தர்கள் மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் சிலர் அங்கு சென்றனர். பக்தர்களின் கடும் போரட்டம் காரணமாக அங்கு வந்த பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்களை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், சபரிமலை கோயிலுக்குச் செல்லவிருந்த நிலையில், அனைவரும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்றும், நீதிமன்றத்தின் உரிய அனுமதி இருந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிக்க முடியும் எனவும் கேரள அரசு தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், தற்போது பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், இன்று சபரிமலைக்கு செல்ல உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக இன்று காலை கொச்சி வந்தடைந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று இந்திய அரசியல் அமைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம், நான் சபரிமலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. கோயிலுக்கு செல்வதை மாநில அரசோ, காவல் துறையோ தடுக்க முடியாது.
பாதுகாப்பு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் கோயிலுக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
பெண்ணிய செயற்பாட்டாளரான இவர், கடந்த ஆண்டும் இதே போல மும்பையில் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிக்க வருகை தந்து, கடும் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.