கடந்த 1947 ஆம் ஆண்டு, அக்டோபர் 26-ம் தேதி, காஷ்மீர் மகாராஜாவாக இருந்த ஹரிசிங், இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து, இந்தியாவின் ஒரு அங்கமாக காஷ்மீர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன், 24 ஆவது நினைவு தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், "காஷ்மீர் காலதாமதமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தற்கு காரணம் மகாராஜா ஹரிசிங் அல்ல. ஷேக் அப்துல்லாவின் பேச்சைக் கேட்ட முதல் பிரதமர் நேருவே அதற்கு காரணம். மற்ற பிராந்தியங்களை இந்தியாவுடன் இணைத்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறே மாறி இருக்கும். காஷ்மீர் முன்னதாகவே இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்திருக்கும். வல்லபாய் பட்டேலின் சுதந்திரத்தில் தலையிட்ட நேரு, ஜனநாயகத்தை மீறி செயல்பட்டுள்ளார். காஷ்மீரின் மற்ற பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்வதற்குள் இந்திய பாதுகாப்பு படையை அனுப்பி அதனை தடுத்து நிறுத்தியது வல்லபாய் பட்டேல் தான். காஷ்மீரின் அதிகாரப்பூர்வ தலைவரான மன்னர் ஹரிசிங்கை தவிர்த்து விட்டு, ஷேக் அப்துல்லாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர் நேரு" என்றார்.