தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கூடாது என்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. தொடர்ந்து தமிழ்நாடு அரசும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் நீட் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தின. இந்தச் சூழலில் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், "இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டம், 1956, 10 D-யின்படி நீட் சட்டம் அமலாகி இருப்பதால் எந்த மாநிலத்திற்கும் நீட் தேர்விலிருந்து விளக்களிக்க முடியாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவப் படிப்பினை மேம்படுத்துவதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டுமென எங்கும் கருத்து தெரிவிக்கவில்லை என்றார்.
தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிலாமல் வெறும் 100 பேர் மட்டுமே கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் தேர்ச்சிபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதுபற்றி அரசிடம் தரவுகள் உள்ளனவா என்று டி.ஆர். பாலு எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அது தொடர்பாக எந்தத் தரவுகளும் மத்திய அரசிடம் இல்லையென தெரிவித்தார்.
இதையும் படிங்க: