காரைக்கால் மாவட்டத்தில் 250 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வில் கலந்து கொள்வதற்காக காரைக்காலில் உள்ள மாணவர்களை புதுச்சேரியில் அமைந்துள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன்படி 12 புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 250 மாணவர்களும், அவர்களது பெற்றோரும் ஏற்றப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வழியாக புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், எதிர்பாராதவிதமாக தரங்கம்பாடி அருகே ஒரு பேருந்து மட்டும் பழுதாகி நின்றது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் கலக்கமடைந்தனர். அதன் பின்னர் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பேருந்து சரி பார்க்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டது. இதனால் அந்தப் பேருந்தில் இருந்த மாணவர்கள் மட்டும் தாமதமாக தேர்வு மையத்திற்கு சென்றடைந்தனர்.