மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தேடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் செயற்குழுக்கு இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் சுசில் குமார் ஷிண்டே அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கலாம் என அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இதுகுறித்து பஞ்சாப் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அம்ரிந்தர் சிங் கூறுகையில்,
"காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்து வழிநடத்த இளம் தலைவர் வேண்டும். இளம் இந்தியர்களின் தேவைக்கு ஏற்ப, கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தலைவர் தேவை. இவை அனைத்தையும் காங்கிரஸ் செயற்குழு கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.