ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கிவருவதாக செய்திகள் வெளிவந்தன. இச்சூழலில் அவை ஜோடிக்கப்பட்ட செய்திகள் என்று மறுதலித்த மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஒரு வார காலமாக காஷ்மீரில் அமைதியான சூழலே நிலவிவருவதாக தெரிவித்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் வருவதற்கு விமான ஏற்பாடு செய்து தருவதாகவும், இங்கு வந்து நிலைமையை கண்டறிந்து அதை பற்றி பேசங்கள் என்றும் கூறி இருந்தார்.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி தனது ட்விட்டரில், ’டியர் மாலிக் அவர்களே, எதிர்கட்சியினர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும், நானும் உங்களது அழைப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, ராணுவ வீரர்களை சந்திக்க ஏதுவான சுதந்திரமான சூழலை மட்டும் ஏற்படுத்திக் கொடுத்தால் போதும்'' என்று பதிவிட்டுள்ளார்.