இந்தியன் க்ளோபல் வீக் 2020 மாநாடு காணொலி காட்சி மூலம் ஜூலை 9ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கடைசி நாளான நேற்று பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் தெளிவான ஒரு அரசியல் நிலைப்பாடு நமக்கு தேவை. கரோனா பரவலுக்கு முன்பு, நாம் பார்த்த நிறைய விஷயங்கள் தற்போது வேகமெடுக்கும்.
சமீப காலங்களில் பல நாடுகள் தேசியவாத கொள்கையுடன் நடந்துகொள்வதை பார்க்க முடிகிறது. பொதுமக்கள் தற்போது தங்களை பாதுகாத்துக்கொள்ளவே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் அரசு மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குள்ளாகும். வரும் காலங்களில் நாம் பல சவால்களை சந்திக்கவுள்ளோம். கரோனாவுக்கு பிந்தைய உலகம் கடினமான ஒன்றாக இருக்கும்" என்றார்.
தொடர்ந்து கரோனா தடுப்பூசி தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், "கரோனாவுக்கு எதிராக ஒன்று அல்லது பல தடுப்பூசிகளை மலிவான விலையில் உருவாக்கி, அதை உலகின் பல நாடுகள் அணுகக்கூடிய வகையில் மாற்றுவதில் இந்தியாவின் பங்கு வரும் காலத்தில் நிச்சயமாக இருக்கும்.
கரோனா தொற்றுக்கு தேவைப்படும் மருந்துகளை 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. முன்பே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள், முறையாகக் கடைப்பிடிக்கப்படும் தகுந்த இடைவெளி ஆகியவையே இதற்கு காரணம்.
கரோனாவுக்குப் பிந்தைய உலகில், சுகாதாரம் குறித்த விஷயங்களில் நாம் இன்னும் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.
உலகளவில் கரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், தற்போது கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 61 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் படிப்படியாக குறையும் கரோனா பாதிப்பு