டெல்லி: நாடு முழுவதும் சுமார் 1,200 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதியன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (செப்.21) மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
நாடு முழுவதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, " கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 1,200 பேர் காவல்துறையினரால் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் வெளியான தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) 2018 ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையின்படி, என்.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் (795 பேர் கைது) தான் நாட்டிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக, உத்தரப் பிரதேசம் (338 பேர் கைது) மாநிலம் உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 501 பேர் பல்வேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 229 பேர் மறு ஆய்வு வாரியங்களால் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 272 பேர் தற்போதுவரை காவலில் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 697 பேர் என்எஸ்ஏவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதில் 406 பேர் மறுஆய்வு வாரியங்களால் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 291 பேர் காவலில் உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.