பந்திப்பூர் தேசிய வனவிலங்கு பூங்கா காட்டு வழியாக பயணிகளை ஏற்றுக்கொண்டு கர்நாடக அரசின் சிற்றுந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வந்த காட்டு யானை திடீரென்று சிற்றுந்தை மறித்து தாக்கியது. இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதனால், பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அப்போது பயணி ஒருவர் வாகனத்தில் இருந்தபடியே யானையை துரத்த முயன்றுள்ளார். ஆனால் காட்டு யானை கொஞ்சம் கூட அசராமல் அங்கேயே நின்றுள்ளது.
நிலைமையை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் வாகனத்தை பின்நோக்கி இயக்கியுள்ளார். சிறிது நேரத்தில் யானையும் அந்த இடத்தைவிட்டுச் சென்றது. நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினார்கள். இந்தச் சம்பவத்தின் காணொலிக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.
கடந்த ஜூன் மாதம், அம்மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு பந்திப்பூர் காட்டு வழியாக சென்ற வாகனத்தை இதேபோல் காட்டு யானை ஒன்று தாக்கியது குறிப்பிடத்தக்கது.