குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே கல்லெறித் தாக்குதல் நடந்தது.
அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தலைமைக் காவலர் ரத்தன் லால் என்பவர் உயிரிழந்தார். கல்வீச்சில் காயமடைந்தவர்களுக்கு தேஜ் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ரத்தன் லால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில் டெல்லியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
காவலர் மீதான இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அமைதியான முறையில் போராடுவதே ஆரோக்கியமான ஜனநாயகம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. எத்தனை ஆத்திரமூட்டல் இருந்தாலும் டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் 'ஜெகன் அண்ணா' திட்டம் தொடக்கம்