தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், அதிகளவு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதற்கிடையில், கடந்த சில நாள்களாக குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.
தெற்கு ராஜஸ்தானின் மையப் பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்கள் குறைந்த காற்றழுத்தப் பகுதிகளாக மாறியுள்ளன. இந்த காற்றழுத்தம் இரண்டு நாள்களில் மேற்கு ராஜஸ்தான் நோக்கி நகர்ந்து, பின்னர் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சூறாவளி காற்று அடுத்த 2-3 நாள்களுக்கு தெற்கு ராஜஸ்தானின் சுற்றுப்புறங்களில் பரவவுள்ளதால், அந்நாள்களில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் மோர்பி மாவட்டத்தின் சிக்காலி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில், சிக்கித் தவித்த 30 பேரை தேசியப் பேரிடர் குழுவினர் இன்று (ஆகஸ்ட் 25) மீட்டுள்ளனர். இவர்கள் பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் இன்றும் (ஆகஸ்ட் 25) மற்றும் நாளையும் (ஆகஸ்ட் 26), சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்றும் (ஆகஸ்ட் 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.