பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் அனைவருக்கும் விலையில்லா தானியங்கள் வழங்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் கோட்டையாக கருதப்படும் சப்ரா நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "திருவிழாக் காலம் வர உள்ளதால் எப்படி கொண்டாடப்போகிறோம் என பெண்கள் கவலை கொள்ள வேண்டாம். ஏழை மக்கள் அனைவருக்கும் இலவச தானியங்கள் வழங்கப்படும். பல சவால்களை சந்தித்து இருந்தபோதிலும், மத்திய, மாநில தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. உலகின் பெரிய நாடுகள் கரோனாவின் தாக்கத்தில் மீண்டும் சிக்கியுள்ளன. கரோனா தொடக்க காலத்திலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.
பிகாரில் உள்ள ஏழை மக்களுக்கு துணை நின்றது. நீங்கள் எனக்கும் நிதிஷ் குமாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை எனில், குடும்ப நலனில் மட்டுமே கவனம் செலுத்தும் ஆட்சி வந்து விடும். அது ஏழை மக்களின் கவலைகளை போக்காது. பழைய இருண்ட காலத்திற்குச் இல்லாமல் இருக்க நீங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை கொள்கிறேன். மின், குடிநீர், சாலை, ரயில்வே எனப் பல்வேறு துறைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
2.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரயில்வே திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.