உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சராகவும், ஆந்திர மாநில ஆளுநராகவும் இருந்தவர் என்.டி.திவாரி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரது மகன் ரோஹித் சேகர் திவாரி டெல்லியில் வசித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி உத்தரகாண்டிற்கு சென்று மீண்டும் 15ஆம் தேதி டெல்லி திரும்பிய ரோஹித் அன்றிரவு வீட்டில் மதுபோதையில் இருந்துள்ளார்.
பின்னர் ரோஹித் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் மயங்கிக் கிடப்பதாக அவரது தாயாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ரோஹித்தின் தாய்க்கு அலைபேசி அழைப்பு வந்தபோது அவரது மனைவி அபூர்வா, உறவினர் மற்றும் அவர்களின் வேலைக்காரர் ஆகியவர்களே வீட்டில் இருந்துள்ளனர். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் ரோஹித்தின் மரணம் இயற்கையானது அல்ல என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து தீவிரமாக விசாரணை செய்த குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து ரோஹித்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ரோஹித் - அபூர்வாவின் திருமண உறவில் சில பிரச்னைகள் இருந்து வந்தது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபூர்வாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் ரோஹித்தை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இன்று அவரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.