மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, உழவர்களுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 47 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையில் இன்றுவரை தீர்வை எட்ட முடியவில்லை.
நாடு முழுவதும் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களங்களிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தலைநகர் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆகிய மூன்று தலைவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கின் தீர்ப்பையொட்டி அடுத்தக்கட்ட முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது,“விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும். மத்திய அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் அந்த மூன்று புதிய சட்டங்களுக்கு தடை விதிப்போம்" என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : சோம்நாத் பாரதி மீது கருப்பு மை வீச்சு!