சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடா நகரில் நக்சல் பிரிவில் செயல்பட்டுவந்த தம்பதியினர், சிஆர்பிஎஃப் டிஐஜி டிஎன் லால் மற்றும் அம்மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் முன்னிலையில் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். இதையடுத்து சரணடைந்த தம்பதிக்கு நிவாரணத் தொகையாக காவல் துறை சார்பில் உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. பிரகாஷ் கர்த்தமி என்கிற பாண்டு, அவருடைய மனைவி ஹட்மே கர்த்தாமி என்ற இருவரும், நக்சல் படைப்பிரிவு எண் 24இல் சேர்ந்து பல தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர்.
குறிப்பாக, பாண்டு நடத்திய நக்சல் தாக்குதல்களில் குறைந்தது 11 பாதுகாப்பு வீரர்கள் இறந்தனர். அதில், 2012ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் ஆறு பாதுகாப்பு வீரர்களும், 2015ஆம் ஆண்டு பாண்டு நடத்திய ஐஇடி குண்டு வெடிப்பில் ஐந்து பாதுகாப்பு வீரர்களும் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக பாண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவர் தலைக்கு ரூ. 3 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.
நக்சல் தம்பதியினர் சரணடைந்தது தொடர்பாக பேசிய எஸ்பி அபிஷேக் பல்லவ், “பாண்டு 2008ஆம் ஆண்டு முதல் நக்சல் குழுவுடன் தொடர்பில் இருந்தார். அவர் பல நக்சலைட்டுகளுடன் இணைந்து, பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளார்” என்றார்.
கடந்த மூன்று மாதங்களில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் காவல் துறைக்கும் நக்சலுக்கும் இடையே நடைபெற்ற 17 மோதல் சம்பவங்களில், 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 89 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:பெற்றோர் கண் முன்னே காவலரைக் கொன்ற நக்சல்கள்!